நண்பர்களே யாரும் நீ ஏன் கந்தன் கதையை எழுதினாய் என்றக் கேள்வியை என்னிடம் இதுவரை எழுப்பவில்லை என்றாலும் நான் இதை உங்களுக்குக் கூறுவதற்குக் கடமைப் பட்டிருக்கின்றேன். என்னை கந்தன்கதை எழுதத் தூண்டிய சக்தியே இதையும் உங்கள் கைகளில் கொண்டுவந்து சேர்க்கின்றது. கந்தபுராணத்தை நான் ஏன் எழுதினேன் என்பதையும் எனது கதை ஏன் வித்தியாசமாக நாவல் போலப் புனையப் பட்டிருக்கின்றது என்பதையும் உங்களுக்குத் தெளிவாக்கும்.
சாய்வு நாற்காலியில் அமர்ந்து எனது மடிக்கணிணியையே உற்று
நோக்கிக் கொண்டிருந்தேன். திரையில் ஆன்மஏணி புத்தகவடிவில் வந்து அமர்ந்திருந்தது.
பலரிடமும் கொடுத்து அவர்கள் கருத்துக்களை பெற்றாகிவிட்டது. மனம் சலித்துக்
கொண்டிருந்தது. என்ன உலகம் எதைச் செய்தாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. ஒன்றைசெய்து சென்றால் இது இப்படி இல்லை இதுபோல
இருந்தால் நன்றாக இருக்கும் அப்பொழுதுதான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இப்படி
ஆன்மஏணி என்று பெயர்வைத்து நூலாக்கிக் கொடுத்தால் யார் படிப்பார்கள். இதைப்
படிப்பதனால் என்ன லாபம். அதனால் நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை கதையாகக்
கூறுங்கள் என்று கருத்துகள் தெரித்துவந்து முகத்தில் விழுந்தன. இப்படிக் கூறப்பட்ட
மதிப்பீடுகளில் உண்மை இருந்தாலும் உலகமரியாத எனக்கு சில விசயங்களை இந்த உலகம்
அப்படியே ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. நானூறு
பக்கம் கொண்ட இந்த ஆன்மீகப் புத்தகத்தை கதையாக்கினால் பல ஆயிரம் பக்கங்கள்
நிறைந்துவிடும் அப்பொழுதும் மக்கள் படிக்கமாட்டார்கள்.
எண்ணி எண்ணிச் சுழன்று கொண்டே மனம் மறுதலித்தது. அதற்கு முக்கியமான
காரணம் ஒன்று எனக்குக் கதை எழுதத் தெரியாது என்பது. மற்றொன்று மக்கள் கதைகேட்டுக்கேட்டு
காலம் காலமாக அதன் உண்மைப் பொருளை ஆராய்ந்து காண மறந்து விட்டிருக்கின்றனர் என்பது.
மகாபாரதம் தத்துவம் என்னவென்றுகேட்டால் ஆயிரத்தில்
ஒருசிலரே சரியாக அதன் மூல தத்துவத்தை எடுத்துக் கூற விளைவார்கள். மற்றவர்கள்
அர்ச்சுனன் எப்படி வில்லை வளைத்து அம்பு தொடுத்தான் அது எப்படிப் பல ஆயிரம்
கணைகளாகப் பிரிந்து சென்று கெளவர்களைக் கொன்று குவித்தது என்று அழகான வர்ணனையுடன்
வியந்து கூறுவார்கள். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் கதையிலிருந்து
வெளியே வரமாட்டார்கள் என்று மனம் புலம்பியது.
தத்துவங்களை எப்படி கதையாக எழுதுவது நமக்குத்தான் கதை
படிப்பதிலும் ஆர்வமில்லை அதை எப்படி எழுதுவது என்றும் தெரியாது. அப்படியிருக்க
என்ன செய்வது என்கின்ற சிந்தனையில் சிலநாட்கள் கடந்தன. படிப்பவர்கள் படிக்கட்டும்
அதற்குறிய ரசனை உள்ளவர்கள் வருவார்கள் படிப்பார்கள் என்று வாளாயிருந்துவிட்டேன்.
ஒரு நண்பர் எழுத்தாளர் ஜெயமோகனின் அம்மையப்பம் கதை
அனுப்பிவைத்தார் படித்தேன் நன்றாக இருந்தது மிகஉயர்ந்த எழுத்துநடை புலப்பட்டது.
அவரே ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படியுங்கள் இணையத்தில் உள்ளது என்றார். தேடினேன்
கிடைக்கவில்லை. வெண்முரசு கிடைத்தது சிலபக்கங்கள் படித்தேன் ஆசிரியரின் ஆழமான
எழுத்து நடை பிரமிக்கும் படியாக இருந்தது. வேலைப் பழுவினால் மேற்கொண்டு படிக்க
வாய்ப்பில்லை என்றாலும் சத்தியமாக இப்படில்லாம் என்னால் எழுத முடியாது என்று மனம் மருங்கித்
துவண்டு விழுந்தது.
எழுதுவது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று நன்றாகப் புலப்பட்டது. இறைவன் மீது அவனருளால் 350
கவிதைகள் ஏற்கனவே புனைந்து வைத்திருக்கின்றேன். அதனால் ஓரளவு கவிதை எழுதத் தெரியும் என்று
வெளியில் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கதைகளுக்கு இப்படியொரு உயர்ந்த எழுத்து
வடிவமாகப் படைப்புகள் வந்தால்தான் மக்கள் அதைப் பயன்படுத்துவார்கள் என்றால் திடீரென்று
அதை எங்குச் சென்று கற்றுக்கொள்வது எப்படி அந்தத் திறமைகள் வளர்த்துக் கொள்வது.
அதுவும் புதிதாக திடீரென்று எப்படி அந்தத் திறமை எனக்குள்ளிருந்து எப்படி வெளிப்படும்? சாத்தியமில்லாத
ஒன்றின்மீது எழுந்த கேள்விக்கு விடை ஏதும்
கிடைக்கவில்லை.
ஆர்வத்துடன் சில பழைய பாலகுமாரன் நாவல்களை எடுத்துப்
புரட்டினேன். முன்பு படித்த கோணம் கதை படிக்கின்ற ஆர்வம் ஆனால் இப்போழுது இதை
எப்படி எழுதுகின்றார்கள் என்கின்ற தாகம். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு நடை கோணம்
கதை சொல்லும் விதம் அதில் கருத்துக்களைப் பொதிக்கின்ற வித்தை என்பது தனிப்பட்ட ஒரு
செயலாகவேத் தோன்றியது. அது ஒவ்வொருவரிடமும் வித்தியாசமாகத் மிளிர்ந்துகொண்டிருப்பது
புலப்பட்டது.
சாண்டில்யன் ஒரு பெண்ணை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டால் இரண்டு
மூன்று பக்கங்கள் கடந்துவிடும். கல்கியின் படைப்பு எப்படி என்று நூலகத்திலிருந்து
ஒருபுத்தககம் எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். மலைப்பாக இருந்தது இவ்வளவு கருத்துகள்
மடைதிறந்ததுபோல உரைநடைகள் எங்கிருந்து இவர்களுக்கு வந்து உதிக்கின்றது.
ஒவ்வொன்றாகப் பார்க்கப்பார்க்க மனம் மலைத்துத் துவண்டு நின்றதுதான் மிச்சம். கதை எழுதுவது பெரியகாரியம் அதுவும்
இவர்களைப்போல எழுதுவது என்றால் நடக்குமா அது சத்தியமா கேள்விகள் முடிவில்லாமல்
எழுந்துகொண்டே இருந்தது. அப்படியே எழுதினாலும் என்னைப் போன்ற புதியவர்களை இந்த
உலகம் ஏற்றுக்கொள்ளுமா. அப்படி அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக படைப்புகளை நம்மால்
தரவியலுமா என்றுச் சிந்தனை சிக்குபிடித்துக் கொண்டது.
சரி பரவாயில்லை ஆன்மஏணி அப்படியே ஒரு கதையாக அன்றி
ஒருகருத்துப் பொதியாக கட்டுரைபோல இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைக்கும் போது
மனதில் இருந்த பாரம் குறைந்தது. இருக்கட்டும் என்று நினைத்தாலும் அதை கதைவடிவில்
கொண்டுவரும் எண்ணம் ஆழமாக மனதில் ஊன்றிவிட்டிருந்தது. அதனால் ஒரு முயற்சி செய்வோம்
என்று ஒரு சிறுகதையாக வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன் ஐம்பது பக்கங்கள் கடந்தன.
சென்னையில் கபாலீசுவரர் கோவிலை மையமாகவைத்து மயிலாப்பூரில் இருக்கும் ஒரு இளைஞன்
வாழ்க்கையை மையப்படுத்தி எழுத ஆரம்பித்தேன்.
சில பத்து பக்கங்கள் முடிந்தவுடன் எனது வாட்ஸ்அப் குழுவில்
கருத்துக்கு அனுப்பினேன். பலவேறு கருத்துக்கள் வந்து விழுந்தன. அதிலொன்று கதையின்
ஐந்தாவது பக்கத்திலேயே கதையின் சஸ்பென்ஸ் உடைந்துவிட்டது அதனால் மேற்கொண்டு படிக்க
ஆர்வமில்லாமல் போய்விட்டது என்பது. அடடா இது என்ன ஆன்மீகப் புத்தகத்தில் எதற்கு
சஸ்பென்ஸ் தேடுகின்றார்கள் மக்கள். நான் செய்வது ஏற்கனவே சஸ்பென்சாக இருக்கும்
விசயங்களை உடைத்துச் சொல்லும் முயற்சியல்லவா. மக்கள் எதை விரும்புகின்றார்கள்
என்றுமனம் தெளிவடைந்துகொண்டு வந்துகொண்டிருந்தது.
கண்ணையும் காதுகளையும் மூடிக்கொண்டு மேலும் சில பத்து பக்கங்களை
எழுதிமுடித்தேன். எனது முதல் கதை எனக்குப் பிடித்திருந்தது அதைப் போல படித்த
பலருக்கும் பிடித்திருந்தது. சிலருக்கு அதில் சஸ்பென்ஸ் இருந்தால்
நன்றாகவிருக்கும் என்று தோன்றியது மேலும்சிலர் இது அந்தக் கட்டுரை போன்றே
தோற்றமளிக்கின்றது பெரிதாக வித்தியாசம் இல்லை என்று கூறினார்கள். சிலர் தலையில்
வைத்துக்கொண்டு அற்புதம் என்று புகழ்ந்தார்கள். அப்படியெனில் கருத்து என்பது
அவரவர்களைப் பொறுத்தது நாம் எதைப் பற்றியும் சிந்திக்காமல் எழுதுவோம் என்று
நினைத்தேன். ஆனால் மீண்டும் நமக்கும் கதை எழுதுவதற்கும் வெகுதூரம் என்று மனம் சோர்ந்து அனைத்தையும் தூக்கிப்
போட்டுவிட்டேன்.
சில நாட்கள் கடந்தது . . .
கதை எழுதவேண்டு மென்றால் முதலில் நாம் கதை படிக்க வேண்டுமல்லவா
ஒருவேளை அதனால் தான் நம்மால் சிறந்த நடையை வெளிப்படுத்த முடியவில்லை என்று
மீண்டும் ஜெயமோகனின் வலைத்தளத்தில் வெண்முரசு சிலபக்கங்கள் மட்டும் படித்தேன்.
மனம் துணுக்குற்றது ஒருவேளை ஒரு எழுத்தாளரை படித்துப் படித்து அவரது நடையும்
கதைகூறும் விதம் நமக்கு வந்துவிட்டால் என்ன செய்வது. ஹூம் இங்கே இன்னும் எழுதவே ஆரம்பிக்கவேயில்லை
இருந்தாலும் பெரியகவலை வந்து ஒட்டிக் கொண்டது ஒருவேளை வந்துவிட்டால் என்னசெய்வது
என்று. உனது சட்டியில் ஒன்றுமில்லை அப்படி இருக்க அது இனிக்குமா கசக்குமா அந்த
ஹோட்டலில் இருந்து வாங்கிவந்ததைப் போல இருக்குமா என்று சமையல் செய்வதற்கு முன்பே
ஏனிவ்வளவு குழப்பம் என்று என் மனம் என்னை நோக்கி நகைத்தது. ஒருவேளை இது இயலாமையால் வந்த குறுக்கு புத்தியா
இல்லை எதுவும் எழுதுவதற்குள்ளே எழுந்து நிற்கும் கர்வமா இல்லை தன்னுடையது
தனித்துவமாக இருக்கவேண்டும் என்கின்ற அக்கறையா அல்லது கவன உணர்வா இல்லை எனது
அறியாமையா என்றுத் தெரியாது குழம்பினேன்.
எது எப்படி இருந்தாலும் யாருடையக் கதையையும் சிலபக்கங்களைத் தாண்டி என்னால்
படிக்க முடியாமல் அப்படியே வைத்துவிடுவேன்.
பல நாட்கள் கழிந்தது. புத்தக அலமாரியை சோதித்துக்
கொண்டிருந்த சமயம் பத்து வருடங்களுக்கு முன்பு எனது வீடு கிரகப் பிரவேசத்தின் போது
ஒரு நண்பர் அன்பளிப்பாகக் கொடுத்த கந்தபுராணம் கண்ணில் பட்டது. ஏற்கனவே ஒருமுறை
அதை எடுத்துப் படிக்க முயற்சி செய்திருக்கின்றேன் ஆனால் சில பக்கங்கள் தாண்ட
முடியவில்லை.
தந்தையைப் போலவே தனையன் மீதும் எனக்கு தீராதக் காதலுண்டு
அதனால்தான் சிவத்தின் மீது நான் எழுதிய ஐந்து ஐந்து பாடல்களைக் கொண்ட அவனருளாலே
என்னும் 350 பாடல்கள் கொண்ட தொகுதியில் முதல் நூறு பாடல்களில் ஐந்தாவது பாடலில் கந்தனை
ஏதாவதொருவகையில் பாடல் வரிகள் தொட்டு முடியும்படியாக அமைத்திருப்பேன். அது அவன்
மீது நான் கொண்டிருந்த அன்பின் அடையாளம். என்னைக் கவிதை புனையவைத்தது அவன் என்மீது
கொண்டிருந்த அன்பின் அடையாளம். இப்படி இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல்கள்
நிறைய உண்டு வாழ்வில்.
கந்தனைத் தெரியும் சரி அவனது வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம்
என்று நூலைப் புரட்ட ஆரம்பித்தேன். எங்கிருந்து
ஆரம்பிப்பது. இது என்னக் கேள்வி புத்தகம் படிப்பதென்றால் முதலிருந்துதானே
துவங்கவேண்டும்.
நூல் பொருளடக்கப் பகுதிகளைப் பார்வையிட்டேன். பின்னர்
சட்டென்று உள்ளே சில பகுதிகளை பிரித்துப் பார்த்து படிக்க ஆரம்பித்தேன். மனம்
பெரிதாக ஈடுபடவில்லை. காரணம் இது என்ன
குமரன் பிறந்தபின் அசுரன் பிறக்கின்றான் அதன் பின்னர் கடைசியில் கசியப்பர் மாயை
என்று கதை வருகின்றது அதன் பின்னர் தட்சன் யாகம் என்று நிகழ்வுகள் முன்னுக்குப்
பின் முரணாக வந்திருக்கின்றதே. அப்பொழுது புத்தகத்தை கடைசி அத்தியாயத்திலிருந்து
ஆரம்பிக்கவேண்டுமோ என்று மனம் குழம்பி நின்றது.
மேற்கொண்டு படிக்க முடியவில்லை மேலும் சில நாட்கள் கழிந்தன.
கந்தன் மீதுள்ள காதலால் எப்படியும் படிக்கவேண்டும் என்று
உத்வேகத்துடன் நூலை எடுத்து மீண்டும் பார்வையிட்டேன்.
கண்கள் மீண்டும் பொருளடக்கத்தைப் பார்வையிட்டது. உற்பத்திக்
காண்டம் முதலில் வந்தது அதில் தாரகாசுரவதம் முடிந்துவிடுகின்றது அதன் பின்னர்
அசுரகண்டம் துவங்கி அதில் அசுரர்களின் பிறப்பும் தாரகனின் பிறப்பும் பின்னர்
வருகின்றது. ஏன் இப்படி முரண்பாட்டுடன் தொகுத்திருக்கின்றார்கள் என்று மனம்
குழம்பியது. எழுதியவர்கள் அதீத அறிவுபடைத்தவர்கள்
அப்படியிருக்க இது நடந்தது எவ்விதம்.
காரணமில்லாமல் செய்திருக்க
மாட்டார்கள் என்று தோன்றியது. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இதே
வடிவமைப்பில்தான் அனைவரும் படித்துவருகின்றனர். அவர்களுக்கு யாருக்கும் இல்லாத
அக்கறை நாமக்கெதுக்கு. இதில் நாம் முரண்பாடு காண்பது தவறு என்று மனம் சுட்டிக்
காட்டியது.
உண்மையில் நான்
முரண்பாடுகளைக் காணும் நோக்கத்தில் படிக்கவில்லை எப்படியாவது படித்து முடிக்கவேண்டும்
என்கின்ற ஆவல்தான். ஆனால் அதுவாகக் கண்ணில் வந்து தெரிக்கின்றது என்னசெய்வது என்று
மனம் நொந்துகொண்டேன். குமரனின் மிகப் பெரிய
பங்களிப்பாக நாம் நினைக்கும் பல விசயங்கள் கண்ணுக்குப் படுகின்றதா என்று கூர்ந்து
பார்த்தேன் அதன் சுவடுகள்கூட அங்கு காணப்படவில்லை. மனம் பெரிதும் ஏமாற்றமடைந்தது. மிக உயர்ந்த வீரமும் போரின் வீரதீர சாகசங்களெல்லாம்
நிறைந்திருந்த புராணத்தின் பக்கங்களில் கந்தனுக்கும் தமிழுக்கும் இடமில்லாமல்
போய்விட்டிருந்தது கவலையளித்தது. ஆனால் நாம் கந்தன் என்று நினைக்கும்போதே நமது
நினைவுக்கு வருவது தமிழும் சித்தர்களுமே.
எங்கே சென்று தேடுவது இதற்கான ஆதாரத்தை.
உண்மையில் இதற்கான ஆதாரத்தை புரணமல்லவா நமக்குத் தரவேண்டும். வேறெங்கு சென்று
தேடுவது.
மேற்கொண்டு படிக்கமுடியாமல் வைத்துவிட்டேன்.
என்ன நடந்தது என்று தெரியாது சிலநாட்கள் கடந்தன. தலையில் சில உத்தரவுகள் வந்து பிறந்தது நீயே
எழுது என்று. முதன்முதலில் பாடல்கள் வந்து
பிறந்தபோது நடந்ததுபோலவே அன்று
கதைஎழுதவும் இறைவன் என்னை பணித்து எம்மை இயக்கினார். அன்று
காலை நான் மடிக்கணினி எடுத்துக் கொண்டு அமர்ந்து நினைவில் உதித்த அந்தக்
காட்சியை எழுத்தாக வடிக்க ஆரம்பித்தேன். அது சூரனின் தவமாக வடிவெடுத்து
வந்துநின்றது. அதைத் தொடர்ந்து நினைவில் நின்ற கந்தபுராண நிகழ்வுகளைத் தொகுத்து
தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன் பதினைந்து பக்கங்கள் வந்தவுடன் கந்தபுராணம் என்று
குழுவொன்று துவங்கி அதில் அனைவரும் கலந்துகொள்ளுங்கள் என்று பெரிதாக பெருமையுடன்
அறிவித்தாகியது. ஆனால் ஒரு சிலரே குழுவில்
இணைந்தனர்
பின்னர் தான் சற்று பயம் வந்தது தெரியாமல்
செய்துவிட்டோமோ. ஒரு சிறிய செயலைச்
செய்துவிட்டு பெருமையாக பீற்றிக்கொண்டோமோ என்று மனம் குன்றியது.
யாரும் படிக்கவிட்டால் என்ன இதை எழுதி கந்தனின் காலடியில்
வைப்பதுவே நமது சங்கல்பம். அதனால் யார் இணைந்தாலும் இணையாவிட்டாலும் படித்தாலும்
படிக்காவிட்டாலும் அதைப்பற்றி நாம் கவலைப் படக்கூடாது என்று வைராக்கியம் கொண்டு
தொடர்ந்து எழுதத் துவங்கினேன்.
நிகழ்வுகளையும் நிகழ்வுகளில் வரும் கதாப்பாத்திரங்களின்
பெயர்களையும் தெரிந்துகொள்ள வேண்டி மீண்டும் கந்தபுராணம் எடுத்து அந்தந்தப்
பகுதிகளை மட்டும் பார்வையிட்டுவிட்டு வைத்துவிடுவேன். எந்தப் பகுதியை எழுதவேண்டுமோ அதை மட்டும்
பார்வையிட்டுவிட்டு நினைவில்தொகுத்துக்
கொண்டு பின் எனது கற்பனையில் இறையருளால் உதிக்கின்ற கதையை அப்படியே எழுத
ஆரம்பித்துவிடுவேன். புரணத்தில் தென்பட்ட சில
முரண்பாடுகளை வலைத்தளங்களில் பலரும் அதே
விதமாக கண்டு தமது கருத்தை வெளிப்படுத்தியிருந்ததை பின்னர் வலைதளங்களை பார்வையிடும்
சமயம் அறிந்துகொண்டேன்.
1. சூரனுக்குப் பயந்து எங்கோ ஓடி ஒளிந்து கொண்ட இந்திரனை
உலகெங்கும் சூரனின் வீரர்கள் வலைவீசித் தேடிக்கொண்டிருக்க, சூரனின்
பட்டாபிசேக நிகழ்வில் இந்திரனே வந்திருந்து அவனுக்கு வெற்றிலை பெட்டி தூக்குவது
எப்படி என்பதற்கு விடை கிடைக்கவில்லை. கந்தபுராணம் ரேவதி பாலசுப்ரமணியம் (241 pg) LKM பதிப்பகம்.
2. குமரன்
பிறந்து சிறு குழந்தையாக இருக்கும்போது மலைகளைத் தலைகீழாக திருப்புவதுவும்
ஆறுகளைத்தடுத்து அதன் போக்கை மாற்றுவதுவும் என்று பல லீலைகளைச் செய்துகொண்டிருக்க.
இதைக் கேள்விப்பட்ட இந்திரன் தனது
ஐராவதத்தில் ஏறி வந்து குழந்தை கந்தனுடன் போர்புரிந்து தோற்பதாகவும். சிறைபடுவதாகவும்
கூறப்படு கின்றது.
அதெப்படி சிறுகுழந்தை குமரனின் மீது இவ்வளவு பெரிய
படைக்கொண்டு வந்து தாக்கினான் சூரனுக்குப் பயந்து
ஓடி ஒளிந்து கொண்ட இந்திரன். குமரன் பிறக்கவேண்டுமென்று தவம் கிடந்த இந்திரன் ஐராவதத்துடன்
வந்து சிறுகுழந்தையுடன் போர்புரிந்தார். அவர்களுக்கு எதிரில் நிற்கும் சிறுவன்
ஈசனின் மைந்தன் என்பது நினைவில்லையா அல்லது முருகனை உயர்த்திக் காட்டவேண்டும்
என்பதற்காகக் கூறப்பட்ட நிகழ்வுகளா என்று மனம் குழம்பியது. அவர்களை எதிரில்
நிற்பவன் யாரென்று தெரியாத அளவுக்கு ஞானமில்லாதவர்களாகக் காட்டியிருப்பது
ஆச்சரியமளிக்கின்றது.
3. ஒரு
வெள்ளம் சேனை என்பது பத்துக் கோடிகோடி சனத்திரள். உலகத்தின் சனத்தொகை இன்று ஆயிரம்
கோடியைத் தொட்டிருக்கும் நிலையில் ஒரு சேனையில் பத்து வெள்ளம் நூறு வெள்ளம் என்று
எங்கிருந்து வந்து சேர்ந்தனர் என்று நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. ஒன்று
இது மிகைப்படுத்தப் பட்ட பகுதி அதாவது பெரும்போர் என்று காட்டவேண்டிய
கட்டாயத்திற்காகச் சொல்லப்பட்டிருக்கலாம் அல்லது வெள்ளம் என்பதன் பொருள் வேறாகவும்
இருக்கலாம்.
இதைப் போலவே சித்தர்களின் நூல்களிலும் சில இடங்களில்
எனக்குத் தெறித்த முரண்பாடொன்று கோடிகோடி யுகங்கள் வாழலாச்சி என்று பலவிடங்களில்
குறிப்பிடப்பட்டிருப்பதுவும். உகம் என்பது பலலட்சம் வருடங்களைக் (432000) கொண்டது
என்று பண்டைய நூல்கள் குறிப்புகள் தருகின்றன. அப்படியிருக்க ஒருவர் கோடிகோடி யுகம்
வழ்ந்திருப்பதை போகமுனிவர் கூறுமிடத்து கீழ்க்கண்டவாறு பயன்படுத்தியிருக்கின்றார்.
காடவே காகமென
உருவைக்கொண்டு கண்டிருந்தார் கோடியுகங் கரைகாணேனே (போகர் சப்தகாண்டம் 176)
போகாது
கர்பாந்திரக்காலமட்டும் பொலிவான தேகம் இரும்புபோலாம்
வேகாது
சடந்தானும் தீயில்தானும் விருப்பமுடன் கோடியுகங் காணலாகும் (போகர் சப்தகாண்டம் 1618)
சித்தர்களின் நூல்களைப் படிக்கும் சமயம் எனைத் தொற்றிக்
கொண்ட மேற்கண்ட கேள்வி கந்தபுராணத்தைப்
படிக்கும் சமயம் இணைந்து கொண்டது. இதற்கான தெளிவும் விடையும் இன்னும்
கிடைக்கவில்லை.
ஆகையால் இந்த வார்த்தைகள் எண்ணிலடங்காத ஒரு பெரிய எண்ணிக்கையைக்
குறிப்பிடப் பயன்படுத்தியது போலவே தோற்றமளிக்கின்றது எமக்கு.
ஒரு நாட்டின் சனத் தொகையில் ஐந்து சதவிகிதத்திற்கும்
குறைவாகவே அதன் போர்ப்படை இருக்க வாய்ப்பிருக்கின்றது. அப்படியிருக்க பல ஆயிரம்
வெள்ளம் சேனைகள் இருதரப்பிலும் பங்குகொண்டு அழிந்து போயின என்று கந்தபுராணத்தில்
குறிப்பிடப்படுவது மிகைப்படுத்த நடந்த செயலாகவே தெரிகின்றது. ஏனெனில் இந்த
எண்ணிக்கையில் சேனைகள் நிற்பதற்குக்கூட இங்கே பூமியில் இடமிருக்காது.
4. கசிபர்
மாயையுடன் கூடும்போது முதல் யாமத்தில் தோன்றிய வியர்வையில் முப்பதாயிரம் வெள்ளம்
அசுரர்கள் தோன்றினார்கள். இரண்டாம் யாமத்தில் நாற்பதாயிரம் வெள்ளம் அசுரர்கள்
தோன்றினார்கள். நான்காவது யாமத்தில் நாற்பதாயிரம் வெள்ளம் அசுரர்கள்
தோன்றினார்கள். என்று அசுரக் காண்டத்தில் குறிப்பிடப்படுவது. இந்த உலகம் கொள்ளாத
சனத்தொகை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றது. இது சத்தியமா இல்லையா என்று
யோசிப்பதைவிட அதைத் தவிர்பதுவே சிறந்தது என்றுத் தோன்றியது எமக்கு. அதனால் இந்தப்
பகுதிகளை வாசிக்க விரும்புபவர்கள் மூலப் புராணத்தை படித்துத் தெரிந்துகொள்ளட்டும்
என்று விட்டுவிட்டேன். மூலப்புராணத்தைப் படித்து அதில் கேள்வி எழுப்பாதவர்கள்கூட
நிச்சயமாக நமது கதையைப் படித்துக் கேள்விகளை எழுப்புவார்கள் அதனால் நாம்
சொல்லவேண்டிய மூலப்பொருள் அடிபட்டு திசைதிரும்பிப் போய்விடும் மக்கள் மொத்தக்
கதையையும் புறக்கணித்து விடுவார்கள் என்று முரண்பாடுகள் வருமிடங்களனைத்தையும்
தவிர்த்துவிட்டேன்.
5.
தமிழ்கடவுள் என்று உலகமெங்கும் போற்றி வழிபடப்பட்டு வருகின்ற முருகன் கந்தன்
தனக்குண்டான புராணத்தில் அதற்கான சிறு தொடர்புகள் கூட இல்லது புராணம்
படைக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கின்றது. தொடர்பிருந்தால் அதை முதலில்
புராணமல்லவா அதை மக்களுக்குத் தெரிவுபடுத்தவேண்டும்.
ஒருவேளை மூலமான லச்சம் / 81000 பாடல்களிலிருந்து
அதை அதை அடிப்படையாக வைத்துப் படைத்தவர்கள் இந்தப் பகுதிகளை தேவையில்லை என்று
விட்டுவிட்டார்களா. அல்லது வேண்டுமென்றே மறைத்துவிட்டார்களா தெரியவில்லை. இல்லை
மூலத்திலேயே அது இல்லையா என்பது ஆராய்ச்சிக்குரியதே.
6. தமிழ்
கடவுள் என்பதைப் போல சித்தர்களின் தலைவன் என்பதுவும் எல்லோராலும்
புரிந்துகொள்ளப்பட்ட ஒரு விசயம். ஆனால் அதற்கான ஆதாரம் எங்கே? புராணம்
ஏதாவது ஒரு குறிப்பு தருகின்றதா என்றால் இல்லை. அசமுகியை பற்றி தெற்கும்
வடக்குமுகமாக விவரித்து எழுதத் துணிந்தவர்கள் ஏன் குமரனின் அடிப்படை உரிமையைப்
பறித்து மறைத்தார்கள் என்று புலப்படவில்லை.
7. இறையானாரும்
எம்பெருமான் முருகவேளும் அகத்தியரும் கட்டிக் காத்த தமிழ்ச்சங்கம் என்று பெருமை
பேசும் நாம் அதற்கான ஆதாரம் தேடினால் ஒன்றும் கிடைப்பதில்லை. சரி புராணம் தானே
அனைத்திற்கும் ஆதாரம் என்று அங்கே தேடினால் அங்கேயும் கிடைப்பது ஒன்றுமில்லை. இது
திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதா இல்லை அவசியமில்லை என்று ஒதுக்கப்பட்டதா என்று
விளங்கவில்லை.
8. சில
முருக பக்தர்களிடம் பேசும்போது அவர்கள் வெளிப்படுத்தியது எனவெனில் ஏன் கந்தபுராணம்
ராமாயணத்தைப் போலவோ மகாபாரதத்தைப் போலவோ மக்களிடையே பிரபலமடையவில்லை என்பதே.
எனக்கு இதற்கான பதிலாக தோன்றியது என்னவெனில் இராமாயணமும்
மகாபாரதமும் தரையில் நடப்பதாகவும் அதில் மனிதர்கள் சம்பந்தப்பட்டு நடப்பதாகவும்
சொல்லப்படுகின்றது. அதனால் மக்கள் தம்மோடு அதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு
அதனுடன் தம்மைத் தொடர்பு படுத்திக் கொண்டுவிடுகின்றார்கள். ஆனால் கந்தபுராணத்தில்
அப்படி இல்லாது தேவர்களும் அசுரர்களும் கணங்களும் மட்டுமே பிரதானமாக
கூறப்பட்டிருக்கின்றது. மக்களின் வாழ்க்கையோடு ஒன்றியநிலையில் வடிக்கப் படவில்லை
என்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது.
ஆகையால் நமது கதை மானுட வாழ்க்கையோடு தொடர்புடையதாக குமரன்
இருக்கவேண்டும் என்று புலப்பட்டது.
9,
சூரனைக் கொன்ற குமரன் அவனது நகரத்தை அப்படியே கடலுக்குள்
அமிழ்த்தி மூழ்கடிக்க அதில் ஆண்களும் பெண்களும் சிறுகுழந்தைகளும் மூழ்கி
இறந்துபோவதாகக் கூறப்படும் செய்தி கருணையே வடிவான கந்தன் தனது எதிரியைக் கொன்று
கொடியாகவும் மயிலாகவும் தனது சேவையில் இணைத்துக் கொண்ட குமரன் அப்படிச்
செய்திருப்பார் என்று நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. https://inioru.com/is-murugan-tamil-god/
தூங்கும்குழந்தைகள்
உட்பட மொத்த ஊரையே கடலுள்மூழ்கடித்தவர் (“முஞ்சு தானை களார்ப்பொடு குழீ…” பாடல்-
படத்தில் காண்க) என்பது ஆராயப்படவேண்டிய
விசயம்.
10. நாம் அறிந்த மகாபாரதத்திலும் ராமாயணத்திலும்
எங்கும் கிருஷ்ணனோ ராமனோ தவம் செய்வதாக நமக்குக் காட்டப்படவில்லை. ஆனால்
பத்மபுரணத்தில் ராமர் தனது துணைவி சீதையை பிரிந்து வருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள
முயற்சி செய்யும் சமயம் அகத்தியர் அங்கு வந்து ராமனுக்கு ஆதித்திய ஹிருதயம்
உபதேசம் செய்து நாற்பத்தெட்டு நாட்கள் தவம் இருந்து சிவதரிசனம் அடைந்து பாசுபத
அஸ்திரத்தைப் பெற்று பின்னரே போருக்கு சென்றதாகச் சிவகீதை என்னும் நூல்
குறிப்பிடுகின்றது. சிவகீதை என்பது பத்மபுராணத்தின் ஒருபகுதி.
11. கந்தபுராணம்
ரேவதி பாலசுப்ரமணியம் (pg192) LKM பதிப்பகம்.
ஒப்பற்ற ஓம குண்டங்கள் ஆயிரம் யோசனை நீளம் அகலம் உயரம் கொண்ட ஹோம குண்டத்தை அமைத்தான்
சூரன்.
ஒரு யோசனை தூரம் என்பது ~12கிமீ ஆக பணிரண்டாயிரம் கிமீ நீளம் அகலம் உயரம் கொண்ட ஹோம குண்டம் அமைத்தான் சூரன் என்பதாகின்றது. நமது பூமியின் அகலமே 12,700 கிலோமீட்டர்களே. இப்படி சிலவிசயங்கள் மிகைப்படுத்தப்
பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்றுத்
தெரியவில்லை.
12.
யாஸ்யாஸ்மரண
மாத்ரென ந்ருணாம் முக்தி : த்ருவாஹிஸாய
புரா சனத்குமாராய ஸ்கந்த்தேனாபி ஹிதா ஹிஸா!!
ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா அவர்கள் எழுதிய
சிவகீதை உரைவிளக்கத்தில் pg12.
முதல் அத்தியாயதிலேயே சிலபக்கங்களிலேயே இந்த ஸ்லோகம் வருகின்றது. இதன் பொருள் “நினைத்த அளவில் முக்தி தரும் இந்த சிவ
கீதையை ஒரு சமயம் காந்தபிரான்
சனத்குமாரருக்கு உபதேசித்தார்.”
சிவகீதையின் முன்னுரையிலேயே கந்தன்
சனத்குமாரருக்கு தனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்ட சிவகீதையை உபதேசம் செய்வதாக
குறிப்பிடப்படுகின்றது. ஆனால் கந்தபுராணத்தில் கந்தனுக்கு ஒரு கீதை
உபதேசிக்கப்பட்டது என்று சிறு குறிப்பு கூட வரவில்லை.
இந்தக் குறிப்பு எனக்குத் தெரிவிக்கப்படும்
முன்னரே பசுபதிகீதை என்று கதையில் குமரனுக்கு ஒரு கீதைஉபதேசம் செய்யப்படுவதாக ஐந்து
பகுதிகள் எழுதி முடித்துவிட்டிருந்தேன்.
சிவகீதையில் அப்படி ஒரு குறிப்பு இருப்பது நான் இருநூறு பக்கங்கள்
கந்தபுராணம் கதை எழுதிய பின்னர் தற்செயலாக அதை புரட்டும் சமயம் எனக்கு இறைவனால்
சுட்டிக் காட்டப்பட்டது. இப்படிப்பட்ட ஆதாரங்களையே நான் தேடிக்கொண்டிருந்தேன்.
ஏனெனில் அனைத்து தடைகளையும் தாண்டி எனது
எழுதும் ஆற்றலுக்கும் மனதைரியத்திற்கும் இதுபோன்ற நிகழ்வுகள் பல நடந்ததே காரணம்.
13.
மேலும் ஒரு நிகழ்வு சுத்தபிரம்மம் என்று எழுதிவிட்டு சிறிது நேரம் சிந்தனை
செய்துகொண்டிருந்தேன். அப்பொழுது சுத்தபிரம்மம் வேறு பிரம்மம் வேறா என்ன அப்படி
இரண்டு பிரம்மம் உண்டா என்று என் மனம் என்னிடம் கேள்வி எழுப்பியது. சட்டென்று
எழுதுவதை நிறுத்திவிட்டு சிந்தித்தேன் ஏதாவது ஆதாரம் கிடைக்குமாவென்று உலகவலையில்
தேடினேன். ஒரு நிமிடம் கூட ஆகவில்லை முதன்முதலில் வந்து உதித்தது பாம்பன்
சுவாமிகளின் ஒரு கட்டுரைப் பக்கம் அதில் முருகனின் ரூபம் முன்வந்துநிற்க அருகில்
பாம்பன் சுவாமிகள் அமர்ந்திருக்கும் படம் வந்து முன்னுதித்தது.
அதில் பாம்பன் சுவாமிகள் சுத்தபிரம்மத்தின்
குணங்களையும் பிரம்மத்தின் குணங்களையும் விவரித்துக் கூறியுள்ளார். எனதுபுத்தி
தெளிவடைந்தது எல்லாம் அவனே நடத்திக் கொண்டிருக்க நான் ஏன் கவலை கொள்ளவேண்டும்
அதனால் கவலைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டுத் தொடர்ந்து எழுத வாரம்பித்தேன்.
நாலு லக்ஷம் கிரந்தங்களில்
வியாஸர் இந்த 18 புராணங்களை எழுதியிருக்கிறார். ஒரு கிரந்தம் என்பது 32
எழுத்துக்கொண்ட ச்லோகம். இந்த நாலு லக்ஷத்தில் கால்வாசியை, அதாவது ஒரு லக்ஷம்
கிரந்தத்தை ‘ஸ்காந்த
புராண’மே
எடுத்துக் கொண்டு விடுகிறது. உலகத்தின் மிகப் பெரிய புஸ்தகம் அதுவாகத்தான்
இருக்கும். மீதி 17 புராணங்களுமாக மூன்று லக்ஷம் கிரந்தம். இது தவிர லக்ஷம்
கிரந்தம் கொண்ட மஹாபாரதத்தையும் வியாஸர் உபகரித்திருக்கிறார். (‘புராணம்’ என்கிற பதினெட்டில் சேராமல்
‘இதிஹாஸம்’ என்று இருப்பவை பாரதமும், ராமாயணமும்.) என்று மேற்கண்ட kamakoti என்னும் வலைத்தளம் கூறுகின்றது.
கந்தபுராணம் ref :
https://ta.wikipedia.org/s/g6k
பதினெண் புராணங்களும்
வடமொழியில் இருப்பவை. இவற்றுள், ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில்
வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம். ஸ்கந்த புராணம்
சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அது ஆறு
சங்கிதைகளைக் கொண்டது. இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள
பல கண்டங்களில் சிவரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள்
காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களதும் தமிழ்த்
தொகுப்பே கசியப்பர் தந்த கந்தபுராணமாகும்.
உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு
காண்டங்களை உடையது. இது 91 படலங்களையும், 10345 பாடல்களையும் உடைய இது முருகப்பெருமானின் வரலாற்றை
முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது.
என்று விக்கிபீடியா கூறுகின்றது.
கந்தபுராணம் ரேவதி பாலசுப்ரமணியம் LKM பதிப்பகம். Pg20
“கச்சியப்ப
சிவாசாரியார் 10345 பாடல்கள் கொண்ட கந்தபுரணத்தை எழுதி முடித்தார்.”
என்று கூறுகின்றது.
இன்றய சமயம்
கச்சியப்பசிவாசாரியார் அவர்களால் கொடுக்கப்பட்ட கந்தபுரணமே பெரும்பாலும் உரைநடை
ஆசிரியர்களுக்கு மூல நூலாக இருந்து வந்திருக்கின்றது. மூலநூலான ஒரு லட்சம்
பாடல்கள் கொண்ட ஸ்காந்தத்தை கச்சியப்பர்
அவர்கள் குறுக்கி பத்தாயிரமாக நமது
கைகளில் கொடுத்துச் சென்றி ருக்கின்றார்கள். ஆனால் அதில் ஒதுக்கப்பட்டவைகள் எவை
மறைக்கப்பட்டவைகள் எவை என்று தெரியவில்லை. ஒருவேளை மீதம் இருக்கும் இஸ்காந்த பகுதிகளைப்
பார்வையிட்டால் நமக்குத் தெரியவரும். ஆனால் ஸ்காந்தத்தின் மூலப்பிரதியை எங்கே சென்று
தேடுவது. நமக்குக் கிடைக்கவும் வாய்பில்லை. அதனால் நமது சிந்தையில் இறைவன் என்ன
தருகின்றாரோ அதை அப்படியே கதைவடிவில் எழுதிவிடலாம் என்றே தொடர்ந்து
எழுதலானேன். எனது சிந்தையில் உதித்த பல
கற்பனைகளும் கந்தபுராணத்தில் வரும் சில முக்கியமான சம்பவங்களும் அப்படியே ஒத்துப்
போவதை பலமுறை நானே கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கின்றேன்.
15. கந்தபுராணம் ரேவதி பாலசுப்ரமணியம் LKM பதிப்பகம். Pg892 முசுகுந்த மன்னன் இந்திரனுக்கு
உதவுதல்.
இந்த முசுகுந்த மன்னனிடமே வீரவாகு முதலான நவவீரர்கள் கந்தனின்
கட்டளையைமேற்கொள்ளாத சாபத்தால் பூவுலகிற்கு
வந்து சேவகம் செய்து வாழ்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. ஒருபக்கம் இந்திரன் சூரனுக்கு
பயந்து மூங்கிலாக சீர்காழித்
தலத்தில் உறைவதாக கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் வாலாரி என்னும் அசுரனை அழிப்பதற்கு முசுகுந்த மன்னன் தனது
சேனைகளைக் கொடுத்து உதவி மீண்டும் இந்திரனை அவனது ஆட்சியில் அமரவைப்பதாகவும்
வருகின்றது. குமரன் போர்செய்து சூரனை வதைக்கும்
முன்னரே இந்திரனுக்கு முசுகுந்தன் அவனது
அரசாட்சியை வாலாசுரனைக் கொன்று மீட்டுத் தருவதாகக் கூறப்படுவது எப்படி என்றுத்
தெரியவில்லை.
16. சிறு பாலகனாக இருக்கும் குமரன் படைகளை
திரட்டிக்கொண்டு இமயத்திலிருந்து இலங்கை கடந்து கடல் தாண்டி சென்று முதலில்
தாரகாசுரனை வதைத்துவிடுவதாகவும் அதற்கு வீரவாகு மற்றும் முசுகுந்தன் வந்து உதவி
செய்வதாகவும் வருகின்றது. கந்தனுடன் பிறந்த வீரவாகுவும் அச்சமயம்
சிறுகுழந்தையாகவே இருந்திருக்க வேண்டும்.
மேலும் பெரும் சேனையுடன் இமயமலையிலிருந்து புறப்பட்டு இலங்கைக்கும் நாவலந்தீவிற்கும்
தெற்கே குமரிக்கடலில் உள்ள மாயாபுரம் தீவிற்கு எப்படி வந்து சமர் புரிந்தனர்
என்பதுபற்றி தெளிவில்லை.
கந்தபுராணத்தை
நான் முழுமையாகப் படித்துமுடிப்பதற்குள் மேற்கண்ட பலமுரண்பாடுகள் கண்களுக்குத்
தெரியத் துவங்கியது உடன் குழப்பங்கள் வந்து சூழ்ந்துகொண்டது. ஏன் நமக்குப் புத்தி
இப்படிக் குறுக்கே போகின்றது ஒருபக்கம் கந்தபுராணம் எழுதுகின்றேன் என்றுத்
தருக்குடன் அறிவித்துவிட்டு இப்படி முரண்பாடுகளில் சிக்கிக் கொண்டால் எப்படி
கதைநகரும் என்று மனம் வருந்திநின்றது.
ஆனால் நான்
உண்மையில் முரண்பாடுகளைக் காணவேண்டும் என்கின்ற நோக்கில் எதையும்
செய்யவில்லை. நாம் எப்படிக் கதை
சொல்லப்போகின்றோம் நாளை நம்மீது தொடுக்கப்படும் கேள்விகளுக்கு எப்படி பதில்
கூறுவது. மேலும் அதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன என்கின்ற கோணத்தில்
தேடும்சமயம் இவை அனைத்தும் கண்களுக்குக் காட்சியளிக்க ஆரம்பித்தன. ஏனெனில் இதை நான் பார்க்காமல் எழுதினால் நாளை
எனது கதையைப் படிப்பவர்கள் என்னிடம் கேள்விகளை எழுப்பினால் என்ன பதில் சொல்வது
என்று எழுந்த சாக்கிரதை உணர்வா என்று
தெரியவில்லை.
சரி
முரண்பாடுகள் என்றுத் தெரிகின்ற இடங்களை அப்படியே தொடாமல் விட்டுவிட்டு மற்றவற்றை
மட்டும் பிணைத்து எழுதுவோம். ஏனென்றால்
நாம் நமது கதையில் கதாபாத்திரங்களின் தன்மையையும் சம்பவங்களின் உணர்வுகளின்
ஆழத்தையே விவரித்துச் சொல்லப் போகின்றோமேயொழிய அதை மூலபுராணத்தைப் போல விசாலமாக
வர்ணனைகளாக விவரிக்கப் போவதில்லை. கதாப்பாத்திரங்களின் உணர்வு நிலைகளின் ஆழத்தைக்
கூறி அதன் பெருமையை உணர்த்த முயற்சி செய்யலாம் என்று மனதிற்குள் முடிவாகியது.
அதனால் முரண்பாடுகளைப் பொருட்படுத்தாது அவைகளை
அப்படியே விட்டுவிட்டு இறைவனின் உத்தரவுப்படி எதுவும் யோசிக்காமல்
எழுத ஆரம்பித்தாகிவிட்டது. ஆனால் அப்படி எந்த முரண்பாடுகளும் இன்றி கந்தபுராணத்தை
எழுத முடியுமா சாத்தியமா. நாம்
எழுதவிருப்பதின் வடிவமும் ஏற்கனவே இருக்கும் புராணத்தை ஒத்ததாகவே இருந்தால் நாம்
ஏன் எழுதவேண்டும். மக்கள் அதையே
படித்துவிட்டுப் போகலாமே. என்று பல கேள்விகள் உடன் எழுந்து கொண்டிருந்தது.
நாம் எதற்கும் எதிராக முரண்பட்டு ஒன்றை எழுதவில்லை மேலும் அதில்
விடுபட்டிருக்கின்ற விசயங்களைச் சற்று ஆழமாக புனைக்கதைவடிவில் எழுதிக்
கொண்டிருக்கின்றோம் அதனால் மூலக்கதையை விரும்புபவர்கள் இந்தக் கதையை அந்தந்தப்
பகுதிகளில் பொருத்தி விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் என்று மனம்
சமாதானம் செய்து இன்று இந்த புத்தகம் உங்கள் கைகளில் வந்து தவழ்ந்து
கொண்டிருக்கின்றது.
No comments:
Post a Comment